அடியாட்களுடன் சென்று பொருட்களை சூறையாடினர் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை பாஜ பிரமுகர்கள் 19 பேர் கைது: சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரல்

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஷாநவாஸ், ரூ.4.5 லட்சம் வாடகையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தின் உரிமையாளர் ரபீகா, கடை வாடகையை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்ற ரபீகா, வாடகை பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், கடையில் இருந்த 2 பேர் ரபீகாவை கிழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரபீகா, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ஐபிசி 323 மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 60க்கும் மேற்பட்டோர் சூப்பர் மர்க்கெட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பெருட்களை சூறையாடினர். இதை தடுத்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் குத்புதீனை தாக்கிவிட்டு, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சரக்கு வாகனத்தில் அள்ளிக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்து குத்புதீன் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது, கீழ்ப்பாக்கம் 104வது வட்ட பாஜ செயலாளர் பிரபு (38), அயனாவரம் ராஜி தெருவை சேர்ந்த பாஜ மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் (40), கோடம்பாக்கம் பரமேஸ்வரன் காலனி ஆண்வர் நகர் 5வது தெருவை சேர்ந்த பாஜ தென் சென்னை மாவட்ட துணை தலைவர் குணசேகரன், அயனாவரம் ராஜி தெருவை சேர்ந்த வில்லிவாக்கம் தொகுதி தெற்கு மண்டல பாஜ தலைவர் தினேஷ் (36), டி.பி.சத்திரம் 24வது குறுக்கு தெருவை சேர்ந்த அண்ணாநகர் தொகுதி பாஜ இளைஞரணி செயலாளர் கார்த்திக் (26), எழும்பூர் பகுதி பாஜ பிரமுகர் பிரசாந்த் உட்பட 23 பேர் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி, பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அவர்கள் மீது 10 பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஜ நிர்வாகிகள் காமேஸ்வரன், தினேஷ், கார்த்திக், பிரபு உட்பட 19 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாஜ தென் சென்னை மாவட்ட துணை தலைவர் குணசேகரன், எழும்பூர் பாஜ பிரமுகர் பிரசாந்த், கட்டிடத்தின் உரிமையாளர் ரபீகா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். பாஜ பிரமுகர்கள் அடியாட்களுடன் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி, பொருட்களை வேனில் அள்ளி சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: