ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை காக்கிநாடாவில் கரையை கடக்கும்: தமிழகத்தில் 5 இடங்களில் மழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது இன்று காலை காக்கிநாடா அருகே இது கரையைக் கடக்கும். இதையடுத்து, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாமல்லபுரம், பெரியாறு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் 30மிமீ மழை பெய்துள்ளது. சின்ன கல்லார், காஞ்சிபுரம், உத்தரமேரூர் சோளிங்கர் 20 மிமீ மழை பெய்துள்ளது.

இது தவிர சென்னை, திருவள்ளூர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை புறநகர் பகுதியில் பெய்யத்தொடங்கிய மழை மாலை 6 மணி அளிவில் சென்னை நகரில் மயிலாப்பூர், அடையாறு உள்பட பல்வேறு இடங்களிலும் பெய்தது. இந்நிலையில், கடலில் மத்தியமேற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நேற்று மாலை ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டது. இன்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் வளி மண்டலமேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், கோவை, தேனில திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா கடலோரப் பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். இடையிடையே சில நேரங்களில் மணிக்கு 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் இந்த இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் இருப்பதை காட்டும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் சென்னை எண்ணூர், கடலூர், உள்ளிட்ட துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளன.

Related Stories: