பெண் பணியாளர்களின் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாட, ஓய்வெடுக்க 2 அறைகளை அமைக்க வேண்டும்: ஒப்பந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம்

சென்னை: பெண் பணியாளர்களின் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாட, ஓய்வெடுக்க பணியிடத்தில் இரண்டு அறைகளை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு  சட்ட திருத்தம் செய்துள்ளது. இதன்படி பல்வேறு படிவங்கள் மற்றும் அறிக்கைகளை எளிதாக சமர்ப்பிக்கும் வகையில் ஒப்பந்தம், கட்டுமானம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தில் தமிழக அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது.

இது குறித்து சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘ வேலை அளிப்பவர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிலாளரை மருத்துவர் பரிசோதனை செய்து பணியில் ஈடுபட தகுதியானர் என்று சான்று  அளித்தால் மட்டுமே அவரை பணியில் சேர்க்க முடியும். 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் அவர்களின் 6  வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 அறைகள் ஏற்படுத்த வேண்டும். அதில் ஒரு அறை குழந்தைகளை  விளையாட்டு அறையாகவும், மற்றொரு அறை ஓய்வு அறையாகவும் இருக்க வேண்டும். விளையாட்டு அறையில் போதுமான விளையாட்டு சாதனங்களும், ஓய்வு அறையில் கட்டிகள் மற்றும் படுக்கை வசதி இருக்க வேண்டும். தொழிலாளர்  நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த அறையின் கட்டுமானம் இருக்க வேண்டும். மேலும் காலை 6 மணிக்கு முன்பு மற்றும் இரவு 7 மணிக்கு பின்பு பெண் பணியாளர்களை பணியில் ஈடுபட அவர்களின் அனுமதியை பெற  வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: