அரசின் மெத்தனத்தால் மென்பொருளில் குளறுபடி: கோ ஆப்டெக்சுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு

*  இழப்பு தொகையை வசூலிக்க உத்தரவு

* அப்பாவி ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அரசு வழங்கிய மென்பொருளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் தவறு செய்த  அதிகாரிகளை விடுத்து அப்பாவி ஊழியர்களிடம் இழப்பை வசூலிக்க உத்தரவிட்டு இருப்பது சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 168 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சேலை, சட்டை, வேஷ்டி, போர்வை என பல்வேறு ரகங்களில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் உள்ள  விற்பனை பட்டியல்களில் அதிகப்படியான குளறுபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் அனைத்து விற்பனைமையங்களுக்கும் அறிக்கை ஒன்றை எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதில்,  விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு பட்டியலையும் தவறாமல் சரிபார்க்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. நடைமுறையில் உள்ள விற்பனை பட்டியல்களில் அதிகப்படியான குறைபாடுகள் சரிநிலையற்ற மென்பொருள் பட்டியல்களில்  நிதர்சனமான சரியான தொகைக்கும், உண்மையில் கொள்ள வேண்டிய நிகர தொகைக்கும் வித்தியசம் உள்ளதாக தலைமை அலுவலகத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த சரிநிலையற்ற மென்பொருட்கள் குறைப்பாட்டால் ஏற்படும்  இழப்பினை தவிர்க்க ரொக்கம் பெறுதல் மற்றும் வழங்கல் மற்றும் இதர இனங்களில் அனைத்து பட்டியல்கள் கணக்கீட்டினையும் தவறாது சரிபார்த்து தொகையை கையாளவும், இதர அனைத்து இனங்களின் கணக்கீட்டினையும் சரிபார்த்து  நெறிப்படுத்தவும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் இழப்பு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொறுப்பு நிர்ணயிக்கப்படும் என்பதை அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மென்பொருள் குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பாவி ஊழியர்களிடம் இருந்து இழப்பு வசூலிக்க உத்தரவிட்டு இருப்பது, கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பணியாற்றும் சக  ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: