தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு ரயில்கள் இன்றி திண்டாடும் பயணிகள்: கேரளா சென்று ரயில் ஏறிச்செல்லும் அவலம்

நெல்லை: தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு போதிய ரயில்கள் இன்றி பயணிகள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பயணிகள் கேரளா சென்று மும்பை செல்லும் ரயில்களை பிடித்து பயணிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் பொருட்செலவும், கால விரயமும் ஏற்பட்டு வருகிறது. வர்த்தக நகரமான மும்பையில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தாராவி, மட்டுங்கா, வசாய் என தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தென்மாவட்டத்தினர் மட்டுமே 70 சதவீதம் பேர் உள்ளனர். இட்லி வியாபாரம், பேப்பர் விற்பனை, பூ வியாபாரம் என குறிப்பிட்ட தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் மும்பை தமிழர்கள் அடிக்கடி தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதிலும் கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்து செல்வர்.

இவ்வாண்டு கொரோனா பாதிப்பு மும்பை தமிழர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் முதல் இரு இடங்களை மகாராஷ்டிராவும், தமிழகமும் பிடித்ததால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மும்பையில் வசித்த தமிழர்கள் கொரோனா காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். குழந்தைகளுக்கு பால் கிடைக்காமலும், விருப்ப உணவான அரிசி கிடைக்காமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மும்பையில் போடப்பட்ட கொரோனா ஊரடங்கில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு தள்ளப்பட்டனர். ஆண்டாண்டு காலமாக மும்பையில் வசித்த பலர், அங்கிருந்து குடும்பத்தோடு கிடைத்த வாகனங்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பினர். ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பணத்தை தண்ணீராக செலவிட்டு தமிழகத்திற்கு பலர் வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தமிழர்களுக்காக இயக்கப்பட்ட ‘செராமிக் ரயில்கள்’ மும்பையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. ஆனால் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. இதன் விளைவு மும்பை வாழ் தமிழர்கள் வாடகை வாகனங்களை எடுத்து ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. பயணிகளின் ெதாடர் கோரிக்கைக்கு பின்னர், கடைசியில் இரு ரயில்கள் மட்டுமே மும்பையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு தொடங்கி 6 மாதம் நிறைவுறும் வேளையிலும், இரு மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இன்னமும் சீராக இல்லை. ஊரடங்கில் அதிகளவு தளர்வு வந்துவிட்ட இன்றைய சூழலில், தென்மாவட்டங்களில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பொதிகை, பாண்டியன், முத்துநகர் என பல ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மும்பைக்கு செல்ல இன்று வரை ஒரு ரயில் கூட இல்லை. மும்பை ரயில் பயணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை நேத்திராவதி எக்ஸ்பிரசே உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் இந்த எக்ஸ்பிரசில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் பயணிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து வேன் மற்றும் வாடகை கார்களில் திருவனந்தபுரம் சென்று நேத்திராவதி எக்ஸ்பிரசை பிடித்து மும்பைக்கு செல்கின்றனர். நேத்திராவதி எக்ஸ்பிரஸ் கேரள பயணிகளுக்கான ரயில் என்பதால், தென்மாவட்ட பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம். இந்த ரயில் காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த ரயிலை பிடிக்க தென்மாவட்டங்களில் இருந்து மும்பை தமிழர்கள் அதிகாலை 2 மணிக்கே வாடகை வாகனங்களில் புறப்பட்டுச் செல்ல வேண்டியதுள்ளது.

அதேபோல் நேத்திராவதி எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் வந்து சேருகிறது. அதன்பின்னர் இரவு நேரங்களில் போராடி வாகனங்களை பிடித்து சொந்த ஊருக்கு நெல்லை, தூத்துக்குடி மக்கள் திரும்ப வேண்டியதுள்ளது. இதுகுறித்து மும்பை தமிழின ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை கூறுகையில், ‘‘நேத்திராவதி எக்ஸ்பிரசின் நேரங்கள் திருவனந்தபுரம் பயணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் தென்மாவட்டங்களில் இருந்து ரயில் ஏற செல்லும் பயணிகளுக்கு ஏற்றதாக இல்லை. அந்த ரயிலின் நேரத்தை மாற்ற சொல்வதிலும் அர்த்தமில்லை. தமிழகத்திலும், மும்பையிலும் தற்போது கொரோனா தாக்கம் குறைய தொடங்கிவிட்ட சூழலில், தென்மாவட்டங்களில் இருந்து 3 ரயில்களாவது மும்பைக்கு இயக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

ரூ.750ல் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணத்தை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்து மும்பை தமிழர்கள் தற்போது மேற்கொள்கின்றனர். தேவையற்ற பொருட் செலவும், காலவிரயமும் தவிர்க்கப்பட வேண்டும். மும்பையில் குட்டி தமிழகமே உள்ளது. தாராவியில் மட்டுமே 5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே விரைந்து நாகர்கோவில்- மும்பை ரயிலை விரைந்து இயக்கிட வேண்டும்.’’ என்றார். கடந்த 2 மாதங்களாக மும்பையில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், மும்பையில் இருந்து பெங்களூருக்கும் தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, மும்பை- நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மட்டும் மாநில அரசும், ரயில்வே நிர்வாகமும் யோசிப்பதற்கு காரணம்தான் இதுவரை தெரியவில்லை.

விரைவில் இயக்கப்படும்

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘மும்பை தமிழர்களின் பயண சிரமங்களை ரயில்வே துறையும் நன்கு அறிந்துள்ளது. எனவே மும்பைக்கு ரயில் இயக்கத்திற்கான முதற்கட்ட பணிகளை விரைந்து தொடங்கியுள்ளோம். மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை மும்பைக்கும் விரைந்து இயக்க உள்ளோம். அதனடிப்படையில் வரும் 15ம் தேதிக்கு பின்னர் நெல்லை- ஜாம்நகர், நாகர்கோவில்- காந்திதாம் இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவ்விரு ரயில்களுமே மும்பையை தொட்டு செல்பவை. நாகர்கோவில்- மும்பை வாரம் இருமுறை ரயிலுக்கும் கூட தெற்கு ரயில்வே அனுமதி வழங்கிவிட்டது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த மாதத்தில் தென்மாவட்டங்களில் இருந்து மும்பை செல்வோருக்கான பயணம் சீராகும் என நம்புகிறோம்.’’ என்றனர்.

சுண்டைக்காய் கால்பணம் சுமைக்கூலி முக்கால் பணம்

நெல்லையை சேர்ந்த ரயில் பயணி அருணாசலம் கூறுகையில், ‘‘கொரோனா வந்த பின்னர் மும்பை செல்வோரின் சோகங்கள் சொல்லால் விவரிக்க முடியாது. மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வருவதற்கு ரூ.700 கட்டணம். ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வருவதற்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியதுள்ளது. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லையில் உள்ள கிராமங்களுக்கு செல்ல டாக்சிகள் ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றன. இ பாஸ் முறை அமலில் இருந்தபோது அதையும் சேர்த்தே கட்டணம் வசூலித்தன. பஸ்களில் வருவதாக இருந்தாலும் கூடுதல் கட்டணம் செலவாகிறது. நேத்திராவதி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இரவு 8 மணிக்கு வந்து சேருகிறது.

அதன்பின்னர் தமிழக எல்கைக்கு வர அங்கிருந்து பஸ்கள் கிடையாது. எனவே திருவனந்தபுரம் முதல் களியக்காவிளை வருவதற்கு டாக்சிகளில் ரூ.400 செலவாகிறது. களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் வர பஸ்சில் ரூ.40ம், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வருவதற்கு ரூ.70ம் செலவாகிறது. ஆக மொத்தம் ரூ.500க்கும் குறையாமல் பஸ்களில் வந்தால் கூட செலவு செய்ய வேண்டியதுள்ளது. அதே சமயம் நெல்லையில் இருந்து மும்பைக்கு வழக்கமாக ரயில்கள் இயக்கப்பட்டால், ரூ.750ல் பயணிகள் மும்பை சென்றுவிட முடியும்.’’ என்றார்.

Related Stories: