30க்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: 30க்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என  அனைத்து நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி 1,200க்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக  தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் அக்.11ம் தேதி வரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 605 பேர் குணமடைந்துள்ளனர். 13 ஆயிரத்து 446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றுவருகின்றனர். 3,373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த மாதம் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது  அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில்  கடைசியாக 36 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில், நேற்று திடீரென 70 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன்படி மணலி மண்டலத்தில் 4 பகுதிகள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 பகுதிகள், ராயபுரம் மண்டலத்தில் 2 பகுதிகள், திரு.வி.நகர்  மண்டலத்தில் 2 பகுதிகள், அம்பத்தூர் மண்டலத்தில் 29 பகுதிகள், அண்ணா நகர் மண்டலத்தில் 3 பகுதிகள், தேனாம்பேட்டையில் 4 பகுதிகள்,  கோடம்பாக்கத்தில் 3 பகுதிகள், வளசரவாக்கத்தில் ஒரு பகுதி, ஆலந்தூரில் 5 பகுதிகள், அடையாறில் 13 பகுதிகள், சோழிங்கநல்லூரில் 2 பகுதிகள்  என்று மொத்தம் 79 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

சென்னையில் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 30க்கு மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட  நிறுவனங்கள் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அந்த  நிறுவனங்களில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கோட்ட உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு தெரிவிக்க  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: