புழல் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைப்பதில் மெத்தனம் வீடுகளை வெள்ளம் சூழும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

புழல்: புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஆகாயத்தாமரை படர்ந்து தூர்ந்துள்ளதுடன், கரைப்பகுதிகள் உடைந்துள்ளதால் வரும் மழைக்காலத்தில் சுற்றுப்பகுதி  வீடுகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் புழல் ஏரி முக்கியமானது. தற்போது கிருஷ்ணா கால்வாய் நீர் வரத்தினால் புழல் ஏரி கடல்  போல் காட்சியளிக்கிறது. இதனால், இந்தாண்டு பருவ மழையின்போது ஏரி நிரம்பி, மொத்த கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.அதன்படி புழல் ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்த உபரிநீர் செங்குன்றம், சாமியார் மடம், வடகரை, தண்டல் கழனி, புழல்,  வடபெரும்பாக்கம், கொசப்பூர், மணலி, ஆமுல்லைவாயல், சடையங்குப்பம் வழியாக உள்ள 15 கி.மீ கால்வாய் வழியாக சென்று எண்ணூர் கடலில்  கலக்கும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உபரிநீர் கால்வாய் நீண்ட காலமாக தூர்வாரிபராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆங்காங்கே கரைப்பகுதி உடைந்துள்ளதுடன், ஆகாயத்தாமரை வளர்ந்து தூர்ந்துள்ளது. எனவே, வரும் மழைக் காலத்தில் இந்த கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, சுற்றுப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம்  உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு இந்த உபரிநீர் கால்வாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும், என பொதுப்பணி துறை  அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மழைக் காலத்துக்கு முன் இந்த உபரிநீர் கால்வாயை தூர்வாரி, சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட உயர்  அதிகாரிகள் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: