டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் உள்துறை அதிகாரி உள்பட 20 பேர் கைது: 6 மாதத்திற்கு பின் சிபிசிஐடி நடவடிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டு உள்துறை உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 20 பேர், கடந்த 6 மாதத்திற்கு பின்னர்  கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்,  அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பணிகள், அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டு விஏஓ மற்றும் உள்துறை, வருவாய்துறை  உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டது.  பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள  கீழக்கரையில் தேர்வு எழுதிய 99 பேர் ஒட்டுமொத்தமாக தேர்வு பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே வெளிமாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் திட்டமிட்டு இந்த மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். இதனால்தான் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி  பெற்றுள்ளனர். அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்கள் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி 99  பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, தேர்வு எழுத தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால்,  வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன்,  முன்னாள் டிஜிபியின் கார் டிரைவர் மற்றும் ஒரு எஸ்.ஐ., புரோக்கர்கள் துணையுடன் மோசடி நடந்தது தெரியவந்தது. மேலும், அங்கு தேர்வு எழுதிய  அனைவருமே 5 நிமிடத்தில் அழிய கூடிய மை மூலம் தேர்வு எழுதியதும், விடைத்தாள் கொண்டு வரும் வேனை மதுராந்தகத்தில் வழி மறித்து,  கீழக்கரையில் தேர்வு எழுதிய 99 பேரின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து, ஏற்கனவே அழியும் மையால் எழுதியதால், அவை முற்றிலும்  அழிந்து விட்டதால், புதிய விடைகளை அதில் எழுதிவிட்டு, மீண்டும் ஊழியர்கள் உதவியுடன் விடைத்தாள்களை வேனில் அனுப்பி வைத்திருந்தனர்.  இதனால்தான் மொத்தமாக அனைவருமே வெற்றி பெற்றது தெரியவந்தது.

 இதுகுறித்து விசாரித்தபோதுதான், மேலும் பல தேர்வுகளில் இதுபோல முறைகேட்டில் பல முறை ஈடுபட்டதும், அவர்களில் பலர் தற்போது பணியில்  இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் கைது  செய்யப்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மேலிடத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது. வெறும்  ஊழியர்களை மட்டுமே குற்றவாளியாக்க அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், வழக்கை அப்படியே  கிடப்பில் போடும்படி சிபிசிஐடி அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. இதனால் வழக்கை கடந்த 6 மாதமாக போலீசார் கிடப்பில் போட்டு  விட்டனர்.  அரசின் உத்தரவால், போலீஸ் ஆவணங்களில் தலைமறைவானவர்கள் என்று கூறப்படுகிறவர்கள், கிராமங்களில் விஏஓக்களாகவும், உள்துறை மற்றும்  வருவாய்துறையில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வந்தனர். அதில், உள்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், சிபிசிஐடி போலீசாருக்கே உத்தரவிடும் இடத்தில் இருப்பதும் தெரியவந்தது.  

மேலும், அரசின் உத்தரவால் அவர்கள் அனைவரும் தொடர்ந்து சம்பளம் வாங்கி வந்ததும் தெரிந்தது. இதனால் அரசு பணம் முறைகேடாக செலவு  செய்யப்பட்டு வந்தது. அவர்கள் முறைகேடாக உத்தரவும் போட்டு வந்தனர். மேலும் சில ஊழியர்கள் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு  செய்திருந்தனர். அந்த மனு விசாரணையின்போது ஏன் மற்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்விகளை  எழுப்பினர். அப்போதும் அரசின் உத்தரவை வெளியில் சொல்ல முடியாமல் நீதிமன்றத்தில் போலீசார் திட்டு வாங்கிக் கொண்டு வந்தனர். இதுகுறித்து, தினகரனில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய  வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் போலீசார் மீண்டும் விசாரணையை  தொடங்கினர். பின்னர் உள்துறை, வருவாய்துறை, விஏஓ (கிராம நிர்வாக அதிகாரி) உள்பட 20 பேரை போலீசார் கடந்த 10 நாளில் கைது  செய்துள்ளனர். பின்னர் அவர்கள் 20 பேரையும் சஸ்பெண்ட் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.  அதைத் தொடர்ந்து அவர்கள் 20 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 20க்கும் மேற்பட்டவர்களை  தேடி வருகின்றனர்.

அரசு பணம் வேஸ்ட்

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட துறை  தலைவர்களுக்கும் சிபிசிஐடி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  டிஎன்பிஎஸ்சி தேர்வைப் பொறுத்தவரை, ஒரு தேர்வு நடந்தால், அந்த ஆண்டுக்குள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். இதனால் முறைகேட்டில்  ஈடுபட்டவர்களை டிஸ்மிஸ் செய்தால், டிஎன்பிஎஸ்சியில் முறையாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றவர்களை பணியில் சேர்க்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் அவ்வாறு பணியில் சேர்க்காவிட்டால், நல்ல மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் அடுத்த ஆண்டு  மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு தற்போது பாதி சம்பளம் வழங்கப்படுகிறது.

6  மாதத்திற்குள் அவர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர்ந்து சஸ்பெண்ட்டில் இருந்தால் முக்கால்வாசி சம்பளம் வழங்க  வேண்டும். அதன்படி பார்த்தால், இவர்கள் வேலைக்கே செல்லாமல், முக்கால்வாசி சம்பளத்தை அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கும் சூழ்நிலை  தற்போது உருவாகியுள்ளது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: