எனது மகன் பேரறிவாளனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும்: தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு, அவரது உடல்நிலையை காரணம் காட்டி 90 நாட்கள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன், அங்கிருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரை தாய் அற்புதம்மாள், ஆனந்த கண்ணீருடன் வரவேற்று அழைத்துச் சென்றார். முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:  என் பிள்ளையை கண்டிப்பாக விடுவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மலைபோல் நம்பி இருந்தேன். முன்னாள் முதல்வர் ‘உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன்’ என்று கூறினார். அது நடக்கவில்லை. அமைச்சரவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கியது. அனைவரும் சேர்ந்து விடுதலை செய்ய கோப்புகளை அனுப்பினார்கள். இருந்தாலும் இதைப்பற்றி யாரும் பேசவில்லை. என்னுடைய மகனின் 30 ஆண்டுகால வாழ்க்கை, இளமை அனைத்தும் போய்விட்டது. தற்போது அவனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும். இவ்வாறு வேதனையுடன் கூறினார். வீட்டில் தங்கியிருக்கும் பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவி வருவதால், அதை தவிர்க்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தினமும் வீட்டிற்கே சென்று பேரறிவாளனிடம் பதிவேட்டில் கையெழுத்து வாங்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: