முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் எதிரொலி ஆவண, திருமண பதிவுக்கு சிடி தருவது கட்டாயம்: சார்பதிவாளர்களுக்கு கூடுதல் ஐஜி கண்டிப்பு

சென்னை: முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் எதிரொலி காரணமாக ஆவண, திருமண பதிவுக்கு ‘சிடி’  தருவது கட்டாயம் என கூடுதல் ஐஜி அனைத்து  சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு  செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத்துறை எடுத்தது.  அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு பத்திரப்பதிவு நிகழ்வும் வெப் கேமரா வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் காட்சிகளை  சிடியில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு சிடி தருவதில்லை.

மாறாக, ஒவ்வொரு பதிவுக்கும் 100 சிடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.  அப்படி கேட்டால், ஆவணத்தை தராமல் இழுத்தடிப்பார்கள் என்ற பயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு  பதிவுத்துறையில் லட்சக்கணக்கில் முறைகேடாக பணம் கையாடல் செய்யப்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது.

இந்த புகார் தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு விளக்கம்  கேட்டதாக தெரிகிறது. அதன்பேரில் கூடுதல் பதிவுத்துறை தலைவர், அனைத்து சார்பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில்,  முதலமைச்சர் தனிப்பிரிவு மனுவில் ஆவணப்பதிவுடன் குறுந்தகடு கட்டணம் ₹100 வசூலிக்கப்படுவதாகவும், ஆனால், குறுந்தகடு அளிக்கப்படவில்லை  என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆவண பதிவிற்கும், திருமண பதிவிற்கும் நெகிழி வட்டு (டிவிடி) அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: