வன்கொடுமைக்கு சிறுமி பலி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமைக்கு பலியான சிறுமி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குறும்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி கலைவாணி கடந்த  ஆண்டு வன்கொடுமைக்கு பலியானார். நாவிதர் சமுதாயத்தை சேர்ந்த அச்சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி, மார்பு அறுக்கப்பட்டு பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாகவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. குற்றவாளியாக கருதப்பட்ட கிருபாகரனை தண்டிக்க போதிய ஆதாரம் இல்லை என்று  கூறி நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். இந்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சிறுமி கலைவாணிக்கு நீதி வழங்கவேண்டும்  என்கிற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து குற்றவாளிகளை தண்டிக்கிற வகையில் வழக்கை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை  எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து 19 வயது  குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் . சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: எந்த ஒரு காரணத்திற்காகவும் இனி வருங்காலங்களில் பெண்கள், சிறார்களுக்கு எதிராக குற்றச்செயல்  புரிபவர்கள் இச்சமூகத்தில் நடமாடக்கூடாது. தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர்  தெரிவித்திருக்கின்ற நிலையில், விரைந்து மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி: சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிராக முறையான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு  தண்டனை பெற்றுத்தர வேண்டிய காவல்துறை ஆதாரங்களை அளிக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு இது  தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சிறுமியை சீரழித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை கண்டறிந்து உச்சபட்ச தண்டனை  பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க சிறுமியின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நிற்போம்.

Related Stories: