ஆவடி சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்

ஆவடி: ஆவடி சி.டி.எச் சாலையில் எஸ்.ஏ.பி காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த காலனி நுழைவுவாயில்  அருகில் ராட்சத கழிவுநீர் கால்வாய் செல்கிறது.  இந்த கால்வாயை கடந்து தான் எஸ்ஏ.பி காலனிக்கு சென்று வர வேண்டும். இந்த கால்வாய் பல  ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்கவேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “ஆவடி, சி.டி.எச் சாலை வழியாக தான் தினமும் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள், அரசு மாநகர  பஸ்கள், லாரிகள், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலை  அமைந்துள்ள எஸ்.ஏ.பி காலனி அருகில் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த கால்வாய் பல அடி நீளத்துக்கும்  உடைந்து திறந்து கிடக்கிறது. கால்வாயில் ஆழமும் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன  ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், கால்வாயை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருக்கும். இதனால், சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ராட்சத  பள்ளம் தெரியாமல் கால்வாய்க்குள் தவறி விழுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் காயம் அடைந்து அவதிப்படுகின்றனர். கால்வாயில் கழிவுநீர்  தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வர்த்தக நிறுவனங்கள், வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால்  மர்ம  காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக  உள்ளனர். எனவே, ஆவடி, சி.டி.எச் சாலை, எஸ்.ஏ.பி காலனி அருகிலுள்ள ராட்சத கழிவுநீர் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: