நிஜமாவே நீங்க நல்லாயிருக்கீங்களா?: இன்று உலக மனநல தினம்

நெல்லை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் நாள் உலக மனநல தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1992ம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பால்  இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது.எனக்கு எந்த நோயும் இல்லை என ஒருவர் கூறுவது மட்டும் ஆரோக்கியமாகி விடாது.  ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம்  மூன்றையும் சரியாக பெற்றிருந்தால் மட்டுமே அவரை ஆரோக்கியமானவராக கருத முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘மனம்’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. தேவையற்ற கவலைகள். நிறைவேறாத ஆசைகள்,  நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தோல்விகள், அதிகமான மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன  அழுத்தம் உருவாவதற்கு காரணமாகிறது. இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள்  முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி ஒருவரின் சிந்தனையில், செயலில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின்  அறிகுறியாகவே இருக்கும்,.

உலகளவில் 45 கோடி மக்கள் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் ஏதாவதொரு கட்டத்தில் நான்கில் ஒருவர் ஏதாவதொரு  மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 10 முதல் 19 வயதுடையவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்னைகளால் உலகின் மொத்த  நோய்ப்பளு 16 சதவிகிதமாக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாணவர் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் பல்வேறு மனமாற்றங்கள் நிகழும். இந்தப் பருவங்களில் சரியான  வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கிடைக்காத சிலர் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். மனநல  பிரச்னைகளில் பாதி 14 வயது முதல் தொடங்கி விடுகிறது. ஆனால் பெரும்பாலான பிரச்னைகளைக் கண்டறிவதும் இல்லை, அதற்குரிய சிகிச்சையும்  அளிக்கப்படுவதில்லை.

உரிய நேரத்தில் இப்பிரச்னைகளைக் கவனிக்காவிட்டால் அது, குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி மற்றும் நிறைவான வாழ்க்கையில் பாதிப்பை  உண்டாக்கும்.இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இளைஞர்கள். எனவே இளம் வயதிலேயே மனநலம் குறித்த விழிப்புணர்வை  அதிகப்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே உரிய ஆலோசனைகள் வழங்கினால் இப்பிரச்னைகளை தடுக்கலாம். இளைஞர்களின் மனநலத்தைப்  பேணுவதற்கு பெற்றோர், ஆசிரியர், உறவினர், மருத்துவர் மட்டுமின்றி அரசின் பணியும் இன்றியமையாதது.

Related Stories: