நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி மோசடி: மாஜி ஏடிஜிபி, தயாரிப்பாளர் மீது புகார்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் தாராசந்த் அனெக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் சூரி (42), வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அடையாறு பகுதியை சேர்ந்த முன்னாள் ஏடிஜிபியான ரமேஷ் குடவாலா என்பவர்,  சூரியை அணுகினார். இவர், நடிகர் விஷ்ணு விசாலின் தந்தை. நானும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ‘’வீர தீர சூரன்’’ என்ற திரைப்படம் தயாரிக்க உள்ளோம். அதில், நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார்.  அதற்கு சூரியும்  சம்மதித்துள்ளார். இதையடுத்து, படத்தில் நடிப்பதற்காக ₹40 லட்சம் சம்பளமாக பேசி முடிக்கப்பட்டது. அந்த படத்தில் சூரி நடித்து  கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான தொகையை வழங்காமல், ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில் சூரியிடம்  சமாதானம் பேசி சிறுசேரியில் உள்ள இடத்தை தருவதாக அன்புவேல் ராஜன் உறுதியளித்தார். அதன்படி, அந்த இடத்தை பதிவு செய்ததற்கு பல  தவணையாக 3.15 கோடி வரை சூரி கொடுத்துள்ளார். பின்னர் விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை என்றும் அன்புவேல்  ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, சூரி பணத்தை  திருப்பி கேட்டுள்ளார். அப்போது, 2018 ஜூன் மாதம்  பணத்தை திருப்பி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சிறிய தொகையை திருப்பி கொடுத்துள்ளனர்.

மீதமுள்ள 2 கோடியே 69 லட்சத்து 92  ஆயிரத்து 500ஐ கொடுக்காமல் அன்புவேல் ராஜனும், ரமேஷ் குடவாலாவும் ஏமாற்றினர். இதுகுறித்து அடையாறு போலீசில் சூரி புகார் செய்தார். போலீசார் புகார் தொடர்பாக  நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, சூரி நீதிமன்றத்தை  நாடினார். நீதிபதியின் உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகார் குறித்து  விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், வருகிற 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சூரிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொய்யான குற்றச்சாட்டு: சூரி புகார் பற்றி விஷ்ணு விஷால்

சூரி புகாரில் கூறிய ரமேஷ் குடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை. இது குறித்து விஷ்ணு விஷால் விடுத்துள்ள அறிக்கையில்   கூறியிருப்பதாவது:

என் மீதும், என் தந்தையின் மீதும் பொய்யான  குற்றச்சாட்டுகளை பற்றி படித்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விஷயத்தில்  சிலர் உள்நோக்கத்துடன்  செயல்படுகிறார்கள். எனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோ  நிறுவனம் சார்பில் கவரிமான் பரம்பரை என்ற படம் தயாரிக்க இருந்தோம். அந்த படத்தில்   நடிக்க சூரிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத நிலையில் அந்த  படம் கைவிடப்பட்டது. ஆனாலும் வாங்கிய முன்பணத்தை சூரி  திருப்பித்  தரவில்லை. இந்த நிலையில் இப்போது எங்கள் மீது புகார் அளித்துள்ளார். சட்டத்தின் மீதும், நீதி துறையின் மீதும் எங்களுக்கு முழு  நம்பிக்கை  உள்ளது. இது குறித்து விரிவாக பேசுவது சரியாக இருக்காது. சட்டம்  அனுமதிக்கும் பாதையில் செல்வோம். என்று அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Related Stories: