கொரோனா ஊரடங்கால் வறுமை... 5 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது : விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம், : விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா மகன் சாதிக் பாட்ஷா (35). தனியார் பேருந்து கண்டக்டர். இவரது மனைவி யாஷ்மின் (எ) விஷ்ணுபிரியா (28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக  ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சாதிக் பாட்ஷா பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி குழந்தை ஹாலைய பானுவுக்கு யாஷ்மின் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்த போது அக்குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து சாதிக் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே அக்குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அக்குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வறுமை காரணமாக கைக்குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று இரவு பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையின் தாய் யாஷ்மினை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: