கிரிக்கெட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தராதீர்... கபடி, கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை வழங்குக : நீதிபதிகள் வேண்டுகோள்!!

மதுரை: கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை துவரிமான் மதுரேசன் தாக்கல் செய்த மனு: அறிவுசார் திறன் குறைந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் உலக சிறப்பு ஒலிம்பிக் போட்டி, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாநில அரசு பரிசு வழங்குகிறது. பொதுவான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை மாநில அரசு ரொக்கப் பரிசு வழங்குகிறது.

ஆனால், அறிவுசார் திறன் குறைந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை சமமாக ஊக்கு விப்பது இல்லை. ஹரியானாவில் அறிவுசார் திறன் குறைந்த மாற்றுத்திறன் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊக்கத் தொகை சலுகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழகத்தில் அவ்வீரர்களுக்கு சலுகைகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மதுரேசன் மனவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்களை அரசு ஊக்குவிப்பதில்லை. கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் லாபி செய்யப்படுகிறது. அனைத்து விளையாட்டுக்களையும் சமமாக பாவிக்க வேண்டும்,என்று தெரிவித்தனர். மேலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என அதிருப்தியை வெளியிட்டு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு அக்.,12 க்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: