தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயசந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். 2020 - 22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும் அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறுமென அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளர் சேகரை தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு காலக்கெடுவை செப்டம்பர் 30-ம் வரை நீதிமன்றம் ஏற்கனவே நீட்டித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், மீண்டும் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: