கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: 150 நாடுகளுக்கு மருந்துகள் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெற்ற இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிதியங்கள், மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா-கனடா இடையிலான வணிக உறவுகள் மற்றும் இருநாட்டு பொருளாதாரம் குறித்து பேசினார். மேலும் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்; இந்தியாவின் நிர்வாக அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்யும் விதிகளை அரசு தளர்த்தி உள்ளது. இந்திய சந்தைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். தொழில் தொடங்க எளிதான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு ஈர்ப்பு 23% அதிகரித்துள்ளது. உலக அளவிலான புத்தாக்க திறன் பெற்ற நாடுகளில் இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. வேளாண்துறையில் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களால் விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயத்துறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு லாபம் அதிகரிப்பது மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிகரிக்கும். கடந்த மார்ச் - ஜூன் காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 23% அதிகரித்துள்ளது. முதலீடு செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: