தஞ்சை மேலவீதி அய்யன் குளத்தில் மீண்டும் படகு சவாரி விடப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை: தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன் குளத்தில் மீண்டும் படகு சவாரி விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சை மாநகர பகுதியில் பிரதான பகுதி பெரிய கோயில் தேரோடும் நான்கு வீதிகளாகும். இந்த நான்கு வீதிகளில் நடுவில் அய்யன் குளம் உள்ளது. இந்த குளத்தால் அருகே உள்ள கிணறுகளில் எப்போது தண்ணீர் இருக்கும். ராஜராஜசோழன் காலத்தில் தஞ்சைக்கு முக்கியமான பகுதியாக விளங்கிய நான்கு வீதிகளிலும் உள்ள மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் குளத்துக்கு சிவகங்கை பூங்காவில் இருந்து தண்ணீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாயில் தண்ணீர் வந்தால் சேவப்பன்நாயக்கவாரி, சிவகங்கை குளம் வழியாக அய்யன் குளத்துக்கு செல்லும். இந்நிலையில் அய்யன் குளத்துக்கு சிவகங்கை குளத்திலிருந்து வரும் குழாய் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனால் சிவகங்கை குளத்தில் தண்ணீர் வந்தாலும் அய்யன் குளத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அய்யன் குளம் வறண்டு காணப்பட்டதால் அப்போது சிறப்பு நிதியாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி ஆழ்குழாய் அமைத்தனர்.

மேலும் மக்களை கவருவதற்காகவும், மேலவீதியில் உள்ள கோயில்களுக்கு வரும் மக்கள் வசதிக்காகவும், ராஜராஜசோழ மன்னனின் ஆயிரமாவது ஆண்டையொட்டியும் சிறப்பு நிதி ஒதுக்கி சுற்றுச்சுவரை அழகுப்படுத்தி நீருற்று அமைக்கப்பட்டது. மேலும் அய்யன் குளத்தில் படகு சவாரிகளும் விடப்பட்டது. ஆனால் மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் சுற்றுச்சுவர்களில் மரங்கள் முளைத்தும், படகுகள் உடைந்தும் கழிவுநீர் குளமாக மாறியது. இதனால் பயன்பாடின்றி படகு சேதமடைந்து காட்சி பொருளாக உள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அய்யன் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் படகை சீரமைத்து சவாரி விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: