ரூ. 2.35 கோடி நிதி ஒதுக்கீடு உதயகிரி கோட்டை புனரமைப்பு பணி தீவிரம்: டிலெனாய் நினைவிடம் செல்லும் பகுதியில் கற்கள் பதிப்பு

தக்கலை:  தக்கலை அருகே உள்ள உதயகிரி கோட்டை மற்றும் டிலெனாய் நினைவிடம்  தொல்லியல் துறையால் புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.   தற்போது சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உதயகிரி கோட்டை அமைந்துள்ளது.  இந்த கோட்டை 98 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  சுமார் 3.5 கி.மீட்டர்  சுற்றளவில் கோட்டைச்சுவர் உள்ளது. 30 அடி உயரம் கொண்ட இந்த  கோட்டைச்சுவரில் பல இடங்களில் பிள்ளைக்கோட்டையும் உள்ளது.  இந்த கோட்டை  வேணாட்டு மன்னர் ரவி ரவிவர்மா காலத்தில் மண்கோட்டையாக கட்டப்பட்டதாகவும்,  அதன் பிறகு மார்த்தாண்ட வர்மா காலத்தில் கல் கோட்டையாக மாறியதாகவும்  கூறப்படுகிறது.

1741 ல்  குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற நடந்த  போரில் டச்சுப்படையை மன்னர் மார்த்தாண்ட வர்மா முறியடித்தார். இதனால் டச்சுப்படையின் தளபதி ஹாலந்தில் பிறந்த டிலெனாய் உள்ளிட்ட டச்சு வீரர்கள் பிடிபட்டு உதயகிரி கோட்டை வளாகத்தில் சிறை  வைக்கப்பட்டனர். இக்கோட்டையில் இருந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை  தயாரித்தனர். மேலும் வெடி மருந்துகள் தயாரிக்கும் இடமாகவும், எதிரிகளை கைது  செய்து அடைத்து வைக்கும் இடமாகவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில்  விளங்கியது. இதனிடையே உதயகிரியில் சிறை பிடிக்கப்பட்ட டிலெனாயின்   வீரமும், திறமையும் மன்னரை கவர்ந்தது. இதனால் மன்னர் டிலெனாயை தனது  படைத்தளபதியாக நியமித்தார். திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த  டிலெனாய் 1777ல் காலமானார். டிலெனாய் மற்றும் அவரது குடும்பத்தினருடைய  நினைவிடம் உதயகிரி கோட்டை வளாகத்தில் உள்ளது.

இந்த நினைவிடம் சர்ச்  போன்ற அமைப்பு கொண்ட கட்டிட வளாகத்தில் உள்ளது. டிலெனாய் நினைவிடம் மற்றும்  உதயகிரி கோட்டைச்சுவர் தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  நினைவிடம் மற்றும் கோட்டைச்சுவரை 1966ம் ஆண்டைய புராதன சின்னங்கள் மற்றும்  தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு  அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை 1997ல் ஆணையிட்டது. வரலாற்றின்  பக்கங்களில் இடம் பெற்ற டிலெனாய் நினைவிடத்தை வெளிநாட்டு பயணிகள் பலர்  பார்த்து செல்வதுண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த டிலெனாய் நினைவிடம்,  கோட்டைகள் போதிய பராமரிப்பின்றி பாழடையத் தொடங்கியது.

ஓகியின் போது  மரங்கள் விழுந்ததாலும், கற்கள் பெயர்ந்ததாலும் கோட்டைச்சுவரில் பல  இடங்களில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி  நிதி ரூ. 2.35 கோடியில் கோட்டைச்சுவர், டிலெனாய் நினைவிடம்  புதுப்பிப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தொடங்கியது.  கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதம் வேலை நடைபெறவில்லை. தற்போது பணிகள்  முழுவீச்சில் நடந்து வருகிறது. கோட்டை சுவரில் உள்ள  மரங்களின்  வேர்கள்  அகற்றப்பட்டும், கோட்டைச்சுவர்கள் பலப்படுத்தப்பட்டும் வருகிறது. டிலெனாய்  நினைவிடம் மற்றும் அதனைச் சுற்றி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும்  நினைவிடம் செல்வதற்கான பேவர் பிளாக் பதித்த பகுதிகளில் கற்கள் பதிக்கும்  பணி நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடைய இன்னும் 6 மாதம் ஆகும் என  தெரிகிறது.

Related Stories: