சென்னை மக்கள் மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.. அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

சென்னை: சென்னை என்.எஸ்.கே நகரில் செயல்பட்டுவரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கூடுதல் ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன்பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம், தமிழ்நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் 10 சதவீதம் குறைக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறோம்.

சென்னையில் மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய இடங்களில் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் சோதனை துவங்கியுள்ளோம். இந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

சென்னையில் மாநகராட்சி சார்பில் தற்போதுவரை 57 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டுள்ளது. 30 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தற்போதுவரை 30 லட்சம் பேர் சென்னையில் வீட்டு கண்காணிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 2 லட்சம் பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் 20 சதவீதம் நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைய துவங்கியுள்ள நிலையில் முக கவசம் அணிவதை நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகும். பொதுமக்கள் அடுத்த 3 மாதத்துக்கு முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ஒரு பகுதியில் 10 நபர்கள் அல்லது 5 நபர்கள் தொற்றுடன் இருந்தால் மட்டுமே கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 2 நபர்கள் இருந்தால் கூட கட்டுப்பாடு பகுதியாக அறிவித்து உள்ளோம்.இலவச முக கவசம் வழங்கும் திட்டம் மூலம் தற்போது வரை 47 லட்சம் முககவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2.5 லட்சம் முக கவசங்கள் வழங்க வேண்டியுள்ளது. இது குடிசைவாழ் பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

Related Stories: