மாஸ்க் இல்லை....சமூக இடைவெளியும் இல்லை... விமான நிலையத்தில் கொரோனா விதிகளை மதிக்காமல் கட்டுமானப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்: பாதுகாப்பை பறக்கவிட்ட அதிகாரிகள்

சென்னை: கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை புறக்கணிக்கும் வகையில் சென்னை விமான நிலையகட்டுமானப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில்   3 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் சுமார் ₹2,500 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இரண்டரை மாதங்கள் தடைப்பட்டு நின்ற பணிகள், கடந்த ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் நடந்து வருகிறது.  இங்கு பணியாற்றும் கட்டுமானப் பணியாளர்கள் அனைவரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.

அவர்கள் பொழிச்சலூர், பல்லாவரம், திரிசூலம் ஆகிய இடங்களில் தங்கி தினமும் காலையில் தனி பஸ்களில் சென்னை விமான நிலைய கட்டுமானப்பணிக்காக வந்து அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் குறைந்துவிட்டது என்று கூறி, மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து,சென்னை விமான நிலைய கட்டுமான தொழிலாளர்களிடையேயும் கட்டுப்பாடுகள், குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் காணாமலேயே போய்விட்டது. குறிப்பாக கடந்த மாதத்திலிருந்து கட்டுமானப் பணியாளர்கள் பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிவது கிடையாது.

அணிந்திருக்கும் ஒரு சிலரும் முக கவசத்தை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். சானிடைசர், கைகழுவுவவதை முற்றிலும் மறந்து விட்டனர். சமூக இடைவெளி என்பதும் இல்லை. முக்கியமாக தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வரும் பஸ்களில் சமூக இடைவெளியின்றி ஒட்டுமொத்தமாக ஏற்றி வருகின்றனர். அதைப்போல் மாலையில் பணி முடிந்து திரும்புகையில் பஸ் வந்து நின்றதும்,ஒருவரோடு ஒருவர் முட்டிமோதி நெருக்கியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறுகின்றனர்.  சென்னை விமான நிலைய ஊழியர்களிடையே இது பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது, இந்த கட்டுமானப்பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களே செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். மீண்டும் கண்டிப்பாக அறிவுறுத்தி, கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பது கண்காணிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

Related Stories: