திருவள்ளூரில் நீதிபதி வீட்டு முன் வாலிபர், சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 4ம் தேதி வீட்டிலிருந்து மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்பத்தூர் காமராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சீனிவாசன் (20) என்ற தனியார் கம்பெனி ஊழியர் சிறுமியை திருமண ஆசை காட்டி அழைத்து சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடினர்.

இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்தனர்.

மேலும், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் இருவரையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அம்பத்தூரில் தலைமறைவாக இருந்த சீனிவாசனை போலீசார் பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர். விசாரணையில்,  சீனிவாசன் திருமண ஆசை காட்டி, சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மாயமான வழக்கை போக்சோ சட்டத்தின்கீழ் மாற்றம் செய்து சீனிவாசனை கைது செய்தனர். பிறகு, இருவரையும் திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிபதி வீட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர்.

சீனிவாசனை பூந்தமல்லி சிறையில் அடைக்கவும், சிறுமியை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கவும் நீதிபதி வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, இருவரும் மறைத்து வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: