காரிமங்கலம் பகுதியில் ஏரிகளில் மண் திருட்டு அதிகரிப்பு: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிர்ச்சி

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள எரிகளில் மணல் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கண்டுகொள்ளாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.  இந்த ஏரிகளில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் மண் எடுத்தனர். தற்போது எந்த ஏரியிலும்  குடிமராமத்து பணி மேற்கொள்ளாத நிலையில், மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவு பகலாக மண் எடுக்கப்பட்டு  வருகிறது. காரிமங்கலம் தாலுகா அலுவலகம் அருகே குட்டூர் ஏரியில், கடந்த சில நாட்களாக பொக்லைன் மூலம் அதிகளவில் மண் எடுக்கப்பட்டு  வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் இருந்து வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி, தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மண் திருட்டு, மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக,  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வியிடம் கேட்டபோது, நாங்கள் யாருக்கும் மண் எடுக்க  அனுமதி அளிக்கவில்லை. குட்டூர் ஏரியில் மண் அள்ளப்படுவது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

Related Stories: