கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளில் ஏன் தகரம் அடிக்கப்படுகிறது? மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்னால் வழியை மறைத்து தகரம் ஏன் அடிக்கிறீர்கள், எந்த விதியின் கீழ் தகரம் அடிக்கப்படுகிறது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவருக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, எங்களை தொடர்பு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள், எங்களிடம் எங்கு சிகிச்சை பெற போகிறோம் என்று ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவரை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனர்.  

அவரை சிகிச்சைக்காக சேர்த்த அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்ற பின் என் வீட்டை தகரம் வைத்து அடைத்தனர். அறிகுறிகள் இல்லாத, குறைவான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அரசு வக்கீலை பார்த்து, கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு, அவர்கள் வசிக்கும் பகுதியில் என்ன காரணத்திற்காக தகரம் அடிக்கிறீர்கள். எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது. தகரம் அடித்த வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, அவர்கள் வரவில்லை என்று எப்படி தெரியும். மாநகராட்சி அதிகாரிகள் அங்கு போவதில்லை. தகரம் அடிக்க யாருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. ஒருமுறை அடித்த தகரத்தை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் சென்னை  மாநகராட்சி  பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். தகரம் அடிக்க யாருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. ஒருமுறை அடித்த தகரத்தை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்.

Related Stories: