விவசாயிகளுக்கான கிசான் திட்ட முறைகேடு விவகாரம் 1,000 ஊழியர்கள் இடமாற்றத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: விவசாயிகளுக்கு உதவும் வகையில் வருடம் தோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நிதி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் நிதியை பெறும் வகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது வெளியானது. பல முக்கிய அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தும், பலரை பணியிடமாற்றம் செய்தும் தமிழக அரசின் வேளாண்மை துறையின் இயக்குனர் கடந்த செப்டம்பர் 24ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.  

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் சங்கத்தில் உள்ள 1000 உறுப்பினர்களை எந்த விளக்கமும் கேட்காமல் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்தது விதிகளுக்கு முரணானது என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக  வேளாண் துறையின் முதன்மை செயலாளர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: