நேரடி விசாரணைக்கு அனுமதி ஐகோர்ட்டின் அனைத்து நுழை வாயில்களும் திறப்பு: அதிக கூட்டத்தால் கேள்விக்குறியான சமூக இடைவெளி

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் வழக்கம்போல் அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டன. வக்கீல்கள், வழக்கில் நேரில் ஆஜராகும் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வாயில்களில் கூட்டம் அலைமோதியதால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று வக்கீல்கள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் புதுச்சேரி தவிர அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் நேரடியாக வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) இந்துமதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அக்டோபர் 5ம் தேதி முதல் வழக்குகளை நீதிமன்றங்களில் அமர்ந்து நேரடியாக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். வழக்குகள் உள்ள வக்கீல்கள் மற்றும் பார்ட்டி இன் பேர்சன் ஆகியோர் ஆவின் கேட் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் நுழைவு வாயில் வழியாக உரிய வழக்கு ஆவணங்களுடன் வரலாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நேற்று காலை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டன. வக்கீல்களும், வழக்கு தொடர்ந்தவர்களும் வாயில்களில் திரண்டனர். அவர்களிடம் போலீசார் அடையாள அட்டையை கேட்டு அதை சரிபார்த்த பின்னரே அனுமதித்தனர். பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை என்று வக்கீல்கள் குற்றம்சாட்டினர். வாயில்களில் கூட்டம் கூடியதால் சமூக இடைவெளி காணாமல்போனது. இது வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: