கிருஷ்ணகிரி அருகே சந்தூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலி: 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த பஞ்சாயத்து முடிவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் ஊராட்சியில், கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலியானதால், நாளை முதல் 10 நாட்களுக்கு கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சந்தூரில் மளிகை மற்றும் பலகாரக்கடை நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பலியாகினர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த 90 வயது முதியவர், கடந்த 2 நாட்களுக்கு முன் காலையும், அவரது 80 வயது மனைவி அன்றிரவும், அவரது 45 வயது மகன் நேற்று முன்தினம் மாலையும் உயிரிழந்தனர். இதனால், கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிராம பஞ்சாயத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நாளை (7ம்தேதி) முதல் வரும் 16ம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிப்பதாக முடிவு செய்தனர். முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தண்டோரா மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் காட்டகரம் ஊராட்சி முழுவதும் அறிவிக்கப்பட்டது.

Related Stories: