சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் பாதியாக குறைப்பு: 3 மற்றும் 7 நாள் பாஸ் அறிமுகம்

சென்னை: சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் கடந்த ஆண்டு பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணத்தை நேற்று முதல் பாதியாக குறைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 0-4 மணி நேரத்திற்கு 60 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.30ஆகவும், 4-8 மணி நேரத்திற்கு 200 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.75ஆகவும், 8-12 மணி நேரத்திற்கு ரூ.340ஆக இருந்த கட்டணம் ரூ.150 ஆகவும், 12-24 மணி நேரத்திற்கு ரூ.760ஆக இருந்த கட்டணம் ரூ.250ஆகவும், 24 மணி நேரத்திற்கு மேல் ரூ.300 எனவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில்வே பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக 3 நாள் மற்றும் 7 நாட்கள் பாஸ் நடைமுறையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், 3 நாட்கள் பாஸ் ரூ.500ம், 7 நாட்கள் பாஸ் ரூ.800ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்கான மாதாந்திர பயண அட்டை கட்டணம் ரூ.3,000. இருசக்கர வாகனங்களுக்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த கட்டண குறைப்பு நேற்று நடைமுறைக்கு வந்தது. புதிய பட்டியலை பார்க்கிங் பகுதியில் அமைக்கும் பணி ஓரிரு நாளில் நடைபெற உள்ளது. சென்ட்ரலை தொடர்ந்து மேலும் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் குறைக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* மொபட் சேவையை விரிவுபடுத்த ஆய்வு

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார மொபட் சேவை பயன்பாட்டில் உள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் 10 முதல் 20 வரையிலான மின்சார மொபட்கள் நிறுவப்படுகிறது. தினசரி 500க்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் மொபட்களும், வடபழனி, திருமங்கலம் நிலையங்களில் புதிதாகவும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படது. பயணிகளிடம் வரவேற்பு உள்ளதால், இச்சேவையை மேலும் விரிவுபடுத்த புதிய ரயில் நிலையங்களை தேர்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: