குழுவின் விசாரணை முடியும்வரை எஸ்ஐ பணி நியமனம் கூடாது: முறைகேடு வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் காலியாகவுள்ள 969 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச்சில் வெளியானது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜன. 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்தது. எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. கடலூர், வேலூர் உள்ளிட்ட மையங்களில் படித்து தேர்வெழுதிய பலர் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே மதிப்பெண் பெற்றனர். எனவே, அந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர்.

அதை விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு தொடர்பாக சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 3 பேர் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி வாடிப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘எஸ்பி தலைமையில், கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு முன் மனுதாரர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடந்துள்ளது. தற்போது உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது.

இன்னும் அடுத்தகட்ட தேர்வு நடைமுறைகள் நடக்க வேண்டியுள்ளது’’ என்றார். மனுதாரர் வக்கீல் எம்.பொன்னையா ஆஜராகி, ‘‘விசாரணை குழுவினர் அதே காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தான். அதனால், விசாரணை முடியும் வரை தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளக்கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘நியமனம் தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம். ஆனால், விசாரணைக் குழுவின் விசாரணை முடியும் வரை தேர்வானவர்களின் பட்டியலை இறுதி செய்யவோ, பணி நியமனம் மேற்கொள்ளவோ கூடாது. இவை விசாரணை முடிவை பொறுத்தது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: