தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 3 நாள் தடை: கலெக்டரின் ரகசிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தனியார் மருத்துவமனைகளில் 3 நாட்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது என்ற கோவை கலெக்டரின் ரகசிய உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே மீண்டும் ஒருவித அச்சமும், பீதியும் இருந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு, உயிரிழப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களை காட்டி தனியார் மருத்துவமனைகளில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று கோவை மாவட்ட கலெக்டர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு மருத்துவமனையில் சிறிய ஆபரேசன் முதல் பெரிய ஆபரேசன் வரை என்ன செய்தாலும் முதலில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்தால் தான் அறுவை சிகிச்சையே நடக்கிறது. அப்படியிருக்கும் போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற கலெக்டரின் திடீர் உத்தரவால் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேசன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா பரிசோதனை மட்டும் செய்தால் போதும் என்றும் ஒரு உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுவும் முக்கியமானவர்களுக்கு மட்டும் செய்தால் போதும். மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம் என்றும் கலெக்டர் வாய்மொழியாக கூறியதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பேர் வரக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு திடீரென ஒரு உத்தரவு மற்றும் அரசு மருத்துவமனையில் முக்கியமானவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்தால் போதும், மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற உத்தரவு மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.

Related Stories: