தொடர் போராட்டத்தினால் தண்டுரை மீன் மார்க்கெட் திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம்: பட்டாபிராமில் வியாபாரிகள் தொடர் போராட்டம் காரணமாக 5 மாதமாக மூடிக் கிடக்கும் மீன் மார்க்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் திறந்துள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 58 கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகளை விற்பனை செய்துவந்தனர். இந்த மார்க்கெட்டில் ஆவடி, பட்டாபிராம், சோராஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு, கருணாகரசேரி, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்கள், காய்கறிகளை வாங்கி சென்று வந்தனர். இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் வந்தனர். இந்த மார்க்கெட் குறுகிய இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் மீன் மார்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் இழுத்து மூடியது. இந்த மார்க்கெட் மூடிய பிறகு, சில வியாபாரிகள் தண்டுரை மெயின் ரோட்டில் ஆங்காங்கே மீன்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், வெயில், மழையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், வெயிலால் மீன்கள் கெட்டு விடுகின்றன. மேலும், வியாபாரிகள் பலர் கடைகளை வைக்கமுடியாமல், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர்.

இதனையடுத்து, மூடப்பட்ட மீன் மார்க்கெட்டை திறந்து  வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், கடந்த 2ந்தேதி மீன் வியாபாரிகள் பட்டாபிராம், எம்.ஜி.ஆர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மீன் மார்க்கெட்டை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தனர். நேற்று காலை மீன் மார்கெட்டை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் திறந்தது. இதனையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு மார்க்கெட் திறந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து பல்வேறு வகையான மீன்களை வைத்து வியாபாரம் செய்தனர்.

Related Stories: