கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தவர்கள் கூவத்தூர் கூத்தாடிகள்: கமல் தாக்கு

சென்னை: கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இணையதளத்தின் வாயிலாக சமூக  செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவை காரணம் காட்டி கிராம சபையை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் கொரோனா வைரஸ் டாஸ்மாக் கடைகளுக்குள்  செல்வதில்லை. அவர்கள் நடத்தும் விழாக்களுக்குள் செல்வதில்லை. அவர்களை கேள்வி கேட்கும் நேரம் நெருங்கி விட்டது. இதற்காக நாம் போராட  வேண்டிய நேரம் வந்து விட்டது. கூத்தாடிகள், நடிகர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டார்கள். அந்த கூத்தாடிகள்தான்  அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் வந்தார்கள். ஆனால் நிஜமான கூத்தாடிகள் இப்போது இருப்பவர்கள்தான். இவர்கள் கூவத்தூர் கூத்தாடிகள்.  கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றத்தை நடத்தி அதனை நிரூபித்திருக்கிறார்கள். இவர்கள் லஞ்ச கூத்தாடிகள்.

கிராமசபை கூட்டம் நடத்தி இவர்களை வெளிச்சம் போட்டு காட்டிவிடுவோம் என்று பயந்து ரத்து செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் கிராம சபை  கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சட்ட போராட்டமும், அகிம்சை போராட்டமும் நடத்துவோம். மாணவிகளை பஸ்சோடு கொளுத்தியவர்கள்  எங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனாலும் நாங்கள் துணிச்சலுடன் பயணிப்போம்.  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: