பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட கோரி வழக்கு: உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

மதுரை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டோரின் பெயர்களை வெளியிடக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சுகன்யா உள்ளிட்ட 29 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  அரசு பாலிடெக்னிக்  கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை   ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017ல்   வெளியிட்டது.  எழுத்துத்தேர்வில் 1,33,568 பேர் பங்கேற்றனர். முடிவுகள் வெளியிடப்பட்டு  2,110 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இத்தேர்வில் 196 பேர் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதனால் 2017ல் செப்டம்பரில் நடந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 196 பேரும்  தேர்வெழுத தடை விதிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின்  பெயர்களை வெளியிட வேண்டும். நேர்மையாக  தேர்வு எழுதியவர்களை  சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்து, பணி நியமனம் செய்ய வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.   இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்,  தமிழக உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், உறுப்பினர் - செயலர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு  விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: