தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நியமனம்

சென்னை,: தமிழகத்தில் 7 மாதத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவும், எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும் புதிய சட்டம் ஒழுங்கு  ஏடிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த விஜயகுமார், கடந்த 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் என பலர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களைத்தான் இந்த துறையின் இயக்குநராக நியமிப்பது  வழக்கம். விஜயகுமார், இயக்குநராக இருந்த காலத்தில்தான் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவர்கள் தவறே செய்யவில்லை என்று நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்தனர். தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள ஜெயந்த் முரளியை, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்துள்ளனர்.

இதனால் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமாக அரசு மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்த 7  மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிதான் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட எஸ்பிக்கள், சரக  டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் மற்றும் மாநகராட்சி போலீஸ் கமிஷனர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர்.

இதனால் மாநில அரசு சொல்லும்  அனைத்து வேலைகளையும் ஏன், எதற்கு என்ற கேள்விகளை கேட்காமல், கண்ணை மூடிக் கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்கும் நபர்தான் வேண்டும்  என்று ஆலோசனை நடத்தினர்.அதில் 4 பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பரிந்துரையின்பேரில்  பரிசீலிக்கப்பட்டவர்தான் ராஜேஷ்தாஸ். இவர், முன்னாள் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  தென் மண்டல ஐஜியாக பணியாற்றினார். அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ்  இருந்தபோது, தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக  நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஏடிஜிபி பதவி உயர்வு பெற்று மதுவிலக்கு  கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம், எதிர்க்கட்சியினரை ஒடுக்குவது,   அதிமுக உள் கட்சி சண்டை யில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அணி திரளும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட  பல்வேறு வேலைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தகுந்த இடைவெளியில் பொதுமக்கள் அமர்ந்து, தீர்மானங்களை  நிறைவேற்றினர். அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு மாஸ்க் அணிந்தே கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள்  அனைவர் மீதும் ஏடிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, ராஜேஷ்தாஸ் நியமனம் குறித்து தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள திரிபாதியிடமும் அரசு ஆலோசனை நடத்தவில்லை என்று  கூறப்படுகிறது. ஏனெனில், திரிபாதி போலீஸ் கமிஷனராக இருந்தபோது அவரை மாற்றிவிட்டுத்தான் ஜார்ஜ், புதிய போலீஸ் கமிஷனராக  நியமிக்கப்பட்டார். ஜார்ஜ்தான், ராஜேஷ்தாசை சென்னைக்கு கூடுதல் கமிஷனராக கூட்டி வந்தார். இதனால் திரிபாதிக்கும், ராஜேஷ்தாசுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்தது. தற்போது அவருக்கு கீழே ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் அரசு நேரடியாக ராஜேஷ்தாசை இயக்குவதற்காகவே அழைத்து வந்ததாக போலீசில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியிடம், அதிமுக உள் கட்சி சண்டையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: