சென்னை காவல் மாவட்டத்தில் வசூல் வரும் காவல் நிலையங்களை தேர்வு செய்யும் இன்ஸ்பெக்டர்கள்: ஆளும்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்து வேண்டிய இடத்தை பிடிப்பது அம்பலம்

சென்னை,: ஒரு காலத்தில் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட காவல் நிலையங்களில்  பணியமர்த்தப்படுவர். குறிப்பாக, குற்றச் செயல்கள் அதிகம் நிகழும் காவல் நிலையங்களில் திறமையான இன்ஸ்பெக்டர்களையும், குற்ற செயல்கள்  குறைவாக நடைபெறும் காவல் நிலையங்களில் பணிதிறன் குறைந்த இன்ஸ்பெக்டர்களையும் பணியமர்த்துவர். ஆனால் சென்னையில்  இன்ஸ்பெக்டர்களே தங்களுக்கு வேண்டிய காவல் நிலையங்களை தேர்வு செய்யும் நிலைக்கு மாறியுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் காவல்துறையில் மாற்றங்கள் இருப்பின் அதற்கு பின்னால் அரசியலும் உள்ளது. சென்னையில்  பணிபுரியும் 72 இன்ஸ்பெக்டர்கள் சமீபத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்றம் 2 மாதத்திற்கு முன்பே நடைபெற வேண்டியது.  ஆனால், கொரோனாவை காரணம் காட்டி இடமாறுதலை தள்ளிப்போட்டதால், இதை வைத்து ஆளும்கட்சியினர் வசூல் வேட்டையில் இறங்கி  தங்களுக்கு வேண்டியவர்களை குறிப்பிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியில்  அமர்த்தினர்.

சென்னையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் அதிகம் விரும்புவது அடையாறு, மவுன்ட், அம்பத்தூர் காவல் மாவட்டங்களையே. ஏனென்றால்  வருமானம் அதிகம், குற்றச்செயல்கள் குறைவு என்பதால் எவ்வளவு செலவானாலும்  இந்த 3 காவல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில்  பணிபுரிய இன்ஸ்பெக்டர்கள் அதிகளவு பணம் கொடுத்து, பதவி பெறுகின்றனர்.  சென்னையில் நீலாங்கரை, அம்பத்தூர், பீர்க்கன்கரனை, சேலையூர், பள்ளிக்கரணை, தி.நகர், பூக்கடை, செங்குன்றம், அண்ணாநகர் மதுரவாயல்,  கோயம்பேடு, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கொரட்டூர், வேளச்சேரி ஆகியவை ‘ஏ’ தரவரிசையில் உள்ள காவல் நிலையங்கள். இந்த காவல்  நிலையங்களில் பணியாற்ற ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை கொடுக்க இன்ஸ்பெக்டர்கள் தயாராக உள்ளனர்.வேண்டிய காவல் நிலையங்களில் பணிபுரிய ஆளும்கட்சியினரை பிடித்து, அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பணிபுரிகின்றனர்.  குறிப்பிட்ட இந்த காவல் நிலையங்களில் கமிஷனரே நினைத்தாலும் ஒரு இன்ஸ்பெக்டரை நியமிக்க முடியாது. ஏனெனில் இந்த காவல் நிலையங்கள்  அனைத்தும் ஆளும்கட்சியினரின் செல்வாக்கில் உள்ளவை.

ஆளும்கட்சியினரின் கைவசம் உள்ள காவல் நிலையங்களை தவிர்த்து, ‘பி’ தரவரிசையில் உள்ள காவல் நிலையங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள்  தங்களுக்கு தேவையானவர்களை நியமிக்கின்றனர். ஆனால், இந்த ‘பி’ தரவரிசையில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்ற யாரும் முன்  வருவதில்லை.குறிப்பாக வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர், திருவிக நகர், கொளத்தூர் போன்ற காவல் நிலையங்களில் வருமானம்  குறைவு என்பதால் பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் இந்த காவல்நிலையத்தை தவிர்த்து விடுகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் தாங்கள் செலவழித்த பணத்தை 6 மாதத்திற்குள் எடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவத்திலேயே பணியாற்றுவார்கள். இதன் விளைவு  கஞ்சா விற்பனை, பாலியல் தொழில், நிலத்தகராறு, சொத்து பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து, என சட்டத்திற்கு புறம்பான அனைத்து வேலைகளும்  மேற்கண்ட காவல் நிலைய எல்லையில் தடையின்றி நடைபெறும்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘ஒரு இன்ஸ்பெக்டர் பணியில் சேரும்போது அவருக்கு 52  ஆயிரத்து 600 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. நாளடைவில் அவருக்கு அனைத்து சலுகைகளும்  சேர்த்து அவர் உதவி கமிஷனராக ஆகும்போது  1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

எந்த ஒரு சாதாரண அரசு ஊழியர்களும் இவ்வளவு சம்பாதிப்பது கிடையாது. அந்த வகையில் நல்ல சம்பளம் கொடுத்தும், இன்ஸ்பெக்டர்கள் அதிக  பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். அதன் விளைவாகத்தான் ஒவ்வொரு  இடங்களிலும் மாவா, குட்கா, மதுபானம் உள்ளிட்டவற்றை அனுமதித்து சென்னையை நாசமாக்கி வருகின்றனர். தற்போது இது மிகவும்  அதிகரித்துவிட்டது. கமிஷனரே ஒரு காவல் நிலையத்திற்கு  ஒரு இன்ஸ்பெக்டரை நியமிக்க முடியாத நிலையில் உள்ளார். அந்தளவிற்கு  ஆளும்கட்சியினரின் தலையீடுகள் உள்ளன. இவ்வாறு பணம் கொடுத்து குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்யும் இன்ஸ்பெக்டர் எப்படி நேர்மையாக  நடந்து கொள்ள முடியும். இதையெல்லாம் தற்போது உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு  காவல்துறை மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது.

தென் சென்னையில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தை ஒரு குட்டி கமிஷனர் ஆபீஸ் போல நடத்தி வருகிறார். அந்தளவு  அவரது தலையீடுகள் அதிகமாகவே உள்ளது. சில அமைச்சர்களும் காவல்துறை இட மாறுதலில் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு  இன்ஸ்பெக்டர்களுக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். எத்தனையோ திறமையான இன்ஸ்பெக்டர்கள் சென்னையில் சாதாரண காவல்  காவல் நிலையங்களில் கூட பணியமர்த்தப்படாமல் சாதாரண விங் எனப்படும் தனி பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தூக்கி எறியப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகின்றனர். நேர்மையும், உழைப்பும் இனி சென்னையில்  பணிபுரிய எடுபடாது என்பதே சென்னை காவல் மாவட்டத்தின் நிலையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பலம் வாய்ந்த லேடி இன்ஸ்பெக்டர்

அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த நான்கு வருடங்களாக அதே மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.  சமீபத்தில் அவரை வேறு ஒரு காவல் நிலையத்திற்கு மாற்றியபோது, அடுத்த இரண்டு நாட்களில் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அதே  காவல் நிலையத்தில் வந்து அமர்ந்து விட்டார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்ஸ்பெக்டர்கள் செய்யும் தவறினை  மேலதிகாரிகளுக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் புகாராக அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இவரைப் பற்றியும் புகார் அனுப்பி உள்ளனர். ஆனால்  புகார் அனுப்பிய நுண்ணறிவு பிரிவு போலீசாரையே அந்த இடத்தில் இருந்து தூக்கி அடித்து விட்டார் இந்த பெண் இன்ஸ்பெக்டர். விஷயம்  தெரிந்தவர்கள் இவரை பற்றி கேட்டால், சிஎம் அலுவலகம் வரை செல்வாக்கு உள்ளவர் என கூறுகின்றனர்.

சொத்து மதிப்பு எவ்வளவு

சென்னையில் வருவாய் கொழிக்கும் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை பினாமி பெயர்களில்  வாங்கி குவித்து வருகின்றனர்.  இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் சென்னையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் சொத்து  மதிப்பை கணக்கிட வேண்டும், அவர்களின் பினாமி பெயரில் உள்ள சொத்துக்களையும் கண்டறிய வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி  உள்ளனர்.

காத்திருப்பு பட்டியலிலும் பணம்

சென்னையில் தற்போது 72 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சில முக்கிய காவல் நிலையங்களில் இருந்த  இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதில் பல பேர் அரசியல் செல்வாக்குடன் இருப்பவர்கள். எதனால் இவர்களை காத்திருப்போர்  பட்டியலில் வைத்துள்ளார்கள் என்பது குறித்து விசாரித்தபோது, சில தனி பிரிவுகளில் பணம் கொட்டும் தனி பிரிவுகளும் உள்ளதால் இங்கு  சைலண்டாக பணியமர்த்தப்படுகின்றனர். அதனால் இவர்களுக்கு எந்த ஒரு காவல் நிலையங்களையும் ஒதுக்காமல் தற்போது காத்திருப்போர்  பட்டியலில் வைத்துள்ளனர் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கு என்று  தனியாக தனிப் பிரிவுகளில் இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.  இதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிந்து, பணப் பட்டுவாடாவும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: