அக். 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி: நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: வரும் 16ம் தேதி முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல்  செய்யப்பட்ட நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலத்தில், 2017 பிப். 1ம் தேதி முதல்முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி பதவிக்காலம்  மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் மூன்றாவது மத்திய பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட் உட்பட) தயாரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதியான தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி, வரும்  2021-2022ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக வரும்  16ம் தேதி முதல் அதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமே நிலைகுலைந்து உள்ள  நிலையில், வரி வருவாய் வசூலில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. அதனை ஈடுகட்டும்  விதமாக பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. செலவுச் செயலாளர்கள், நிதி செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன்  கலந்துரையாடல்களை முடித்த பின்னர், நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்பு  பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: