கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மேற்குவங்கம் செல்கிறார் அமித்ஷா: மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய விரைவில் மேற்குவங்கம் செல்கிறார். கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில்  மொத்தமுள்ள 40 இடங்களில் 18 இடங்களை பாஜக வென்றது. அடுத்தாண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல்  காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜியின் 10 ஆண்டுகால ஆட்சியை தோற்கடிக்க பாஜக  பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள், மேற்குவங்க மாநில தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமித் ஷா, முதன்முறையாக கட்சி சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மேற்குவங்கத்தில் பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தேர்தல் குறித்த வியூகங்கள் வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘அக். 22ம் தேதி தொடங்கும் துர்கா பூஜைக்கு முன்பு, அமித் ஷா மேற்குவங்க மாநிலத்திற்கு வரவுள்ளார். அங்கு அவர் மாநில தலைவர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பார். வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க மாநில தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதை மக்களிடம் கூற மாநில தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: