யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை தள்ளி வைக்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 4ம் தேதி கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்தேர்வு நடத்தப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இத்தேர்வை வேறு தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிடும்படி கோரி, தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சிலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதால், இனி அதனை தள்ளி வைப்பதற்கு சாத்தியம் இல்லை என யுபிஎஸ்சி தெரிவித்தது. இதனையடுத்து, தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி யுபிஎஸ்சி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தேர்வை தள்ளிவைக்க முடியாது. நீட், ஜே.இ.இ தேர்வுகளை போல் இதையும் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ நாடு முழுவதும் இன்னும் கொரோனா தொற்று அதிகமாகதான் இருந்து வருகிறதே தவிர, குறையவில்லை. அதனால், தேர்வை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள தேர்வை இஷ்டப்படி மாற்றி அமைக்க முடியாது. தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அது சார்ந்த அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள். எனவே, தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது. இது தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,’ என அறிவித்தனர்.

* 6 லட்சம் பேர் பங்கேற்பு

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வை நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் 6 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

Related Stories: