மாநகராட்சியின் 7 மண்டலங்களில் தனியார் பங்களிப்புடன் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் தனியார் பங்களிப்புடன் செயல்திறன் அளவீட்டு முறையில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்பெயின் நாட்டை சார்ந்த உர்பேசர் சுமித் நிறுவனத்திற்கு 8 ஆண்டு காலத்திற்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களுக்குட்பட்ட 92 வார்டுகளில் உள்ள 16,621 தெருக்களில் வசிக்கும் சுமார் 37 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்ட துவக்கி விழா நேற்று சென்னை தீவுத் திடலில் நடந்தது. இதில் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காம்பாக்டர்கள், மெக்கானிக்கல் ஸ்வீப்பர், இ-ரிக்‌ஷா வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரக தொழில்துறை  பென்ஜமின்,  தலைமை செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், உர்பேசர் சுமித் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிறுவனத்தின் மூலம் 125 காம்பாக்டர்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 3,000 இ-ரிக்‌ஷாக்கள், 11,000 காம்பாக்டர் குப்பை தொட்டிகள் போன்ற உபகரணங்களுடன் 10,844 பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த 3 சக்கர மிதிவண்டிகள் முற்றிலும் நீக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள் தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்திற்கு கொண்டு சேர்த்தல் போன்ற 34 எண்ணிக்கையிலான செயல்திறன் குறியீடுகள் வாயிலாக பணிகளை கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படும்

இப்பணிகளை மேற்பார்வையிட பிரத்யேகமாக 3ம் நிலை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் கண்காணிக்கப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடு நிலையங்களான இயற்கை உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்ட கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையம் ஆகிய மையங்களில் சேர்க்கப்படும்.

Related Stories: