விவசாயிகள் நலனை காக்கும் ராஜஸ்தான் அரசை பின்பற்றுங்கள் :முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை, :தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 

மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன.  விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக, பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.விவசாயிகளின் நலனைக் காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

 

இதன்படி, சட்டம்  அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டத்தைக் காங்கிரஸ் ஆளும் இதர மாநில அரசுகள் பயன்படுத்தினால், மத்திய அரசின் பாதகமான சட்டங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: