கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையை ஏற்று பள்ளிகள் நாளை திறப்பு இல்லை: இரவு 9 மணி வரை டீ கடை; ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி; சினிமா தியேட்டர், மின்சார ரயில்கள் இயக்க தடை நீடிப்பு; முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி நாளை முதல் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். நாளை முதல் கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம் என்றும், திரையரங்குகள், மின்சார ரயில்கள் இயக்க தொடர்ந்து தடை நீடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும் சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி இயக்குநர் ஜெ.வி.பீட்டர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

மாவட்ட கலெக்டர்கள் வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழகத்தில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:

* அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்படலாம்.

* தமிழ்நாட்டில் 1.10.2020 (நாளை) முதல், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிய மட்டும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.

* பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள்  மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.  

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

* சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை நீடிக்கும்.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

* திருமணம், வழிபாடு, இறுதி ஊர்வலம் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளில் அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய் தொற்றினை தவிர்க்க வேண்டும்.

* பொதுமக்களின் ஒத்துழைப்பு, நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன தளர்வுகள்...

* உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கலாம்.

* திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு ஒரே சமயத்தில் 100 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

* வார சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: