சென்னை அருகே சேலையூரில் இறந்த வியாபாரிக்கு கொரோனா!..தாமதமாக வந்த முடிவால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் அதிர்ச்சி!!!

சென்னை: சென்னையை அடுத்த சேலையூரில் உயிரிழந்த மீன் வியாபாரிக்கு கொரோனா இருந்தது காலதாமதமாக தெரியவந்ததால் அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்னை சேலையூரை அடுத்த பாரத் நகரை சேர்ந்தவர் குமார். 45 வயதான இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி நெஞ்சுவலி காரணமாக வியாபாரி குமாரை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் தொடர் சிகிச்சை பெற்று வந்த குமார் அன்று மாலை 6 மணியளவில் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உறவினர்கள் குமாரின் உடலை கேட்டுள்ளனர். அப்போது மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே உடலை கொடுக்கப்படும் என கூறியுள்ளனர்.  இதனையடுத்து மருத்துவமனையிலிருந்து வியாபாரி குமாரின் உடலை பெற்று கொண்டு உறவினர்கள் இணைந்து இறுதி சடங்கினை முடித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி மாலை பரிசோதனை முடிவில் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதை தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து அவரது மனைவி மாரியம்மாள், மற்றும் 4 பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் நகராட்சி அதிகாரிகள் முகாம்களை அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையின் கால தாமதத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: