அழிவின் விளிம்பில் உள்ள தப்பு, சேமங்கலம் இசைக்கருவி..: பெரம்பலூர் மாவட்ட தாதர் சமூக இசைக்கலைஞர்கள் வேதனை!!!

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் தப்பு, சேமங்கலம் இசைக்கருவிகளை மீட்டெடுக்க தாதர் சமூக இசைக்கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முந்தைய காலங்களில் அனைத்து ஆலயங்களிலும் இறைவழிபாட்டின்போது தப்பு, சேமங்கலம் என்ற இசைக்கருவி பிரதானமாக இசையாக்கப்பட்டது. தற்போது இசை மின்னணு முறையாகிவிட்டதால் தப்பு, சேமங்கலம் கருவி அழிவின் விளிம்பில் உள்ளது. அந்த இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல யாரும் இல்லை என்ற வேதனை தற்போது தாதர் சமூகத்திற்கு மேலோங்கி உள்ளது. மனித வாழ்வோடு பின்னி பிணைந்து, உயிரில் கலந்த உணர்வாக இருப்பது இசைக்கலையாகும்.

இறை வழிபாட்டிற்கான மங்கள வாத்தியங்களின் வரிசையில் பண்டைய காலம் முதல் தப்பு, சேமங்கலம் ஆகியவையே பிரதானமாக இருந்துள்ளன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், அரசலூர், தொண்டை மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மட்டுமே தப்பு, சேமங்கலம் இசைக்கலை இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளன. அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களில் தப்பு, சேமங்கலம் இசைக்கு கருடபத்து, திருப்பள்ளி எழிற்சி பாடல்களை பாடி வருகின்றனர் தாதர் சமூகத்தினர். அவர்களின் முன்னோர்கள் கற்றுக்கொடுத்தைதை கொண்டு தற்போது இசைத்து வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே அழிவின் விளிம்பில் உள்ள இசைக்கருவியை மீட்டெடுப்பதற்கும், இனி வரும் தலைமுறைகளுக்கு இதனை கற்றுக்கொடுக்கவும் அரசுதான் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தாதர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: