3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் புதிய சட்டங்களை இயற்ற ஆராயுங்கள்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு சோனியா காந்தி உத்தரவு

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் புதிய சட்டங்களை இயற்ற ஆராயுங்கள் என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாக்கள் இப்போது  சட்டமாகிவிட்டன. முன்னதாக, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து மசோதாவில் கையெழுத்திட வேண்டாம்  என்று முறையிட்டன.

ஆனால் அவர் மசோதாவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மசோதாவிற்கு எதிர்ப்பு  தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு.

அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல் அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார் என கூறினார்.

Related Stories:

>