ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பேர் கைது: தலா ரூ.5 லட்சம் வசூலித்த முதன்மைக்கல்வி அலுவலக ஊழியர் உட்பட 2 பேர் சிக்கினர்

சாயல்குடி: போலி ஆவணம் மூலம் அரசு பள்ளியில் பணியில் சேர்ந்த 3 பேரும், அதற்கு உடந்தையாக இருந்த முதன்மை கல்வி அலுவலக ஊழியர், ஊராட்சி ஊழியரும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கியது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 42 இடங்களில், 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கடலாடி அருகே சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஒரு பெண் பணி பொறுப்பேற்ற நிலையில், அப்பள்ளியில் கடந்த 23ம் தேதி ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை வலம்புரி நகரை சேர்ந்த ராஜேஷ் (32) போலி ஆவணம் கொடுத்து பணியில் சேர முயன்றார்.

இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, நேற்று முன்தினம் ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிடம் புகார் அளித்ததால், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேஷை நேற்று கைது செய்தனர். விசாரணையில், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த கண்ணன் (47), போலி ஆணை தயாரித்து கொடுத்து பணியில் சேர வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ராஜேஷை போல் 4 பேர் அரசு பள்ளிகளில் பணி

நியமனம் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலி ஆணை வழங்கி பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்த பரமக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த கலைவாணன் (26), ராமேஸ்வரம் கரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (33) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் இடைத்தரகராக செயல்பட்ட பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரான எஸ்.காவனூரைச் சேர்ந்த கேசவனும் (45) கைது செய்யப்பட்டார். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்த மனோஜ்குமாரை தேடி வருகின்றனர். கண்ணனிடம் நடத்திய விசாரணையில், அவர் டிஎன்பிஎஸ்சி ஆணையை கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்திருப்பதும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.15 லட்சம் பேரம் பேசியதும் தெரிந்தது. முதல்கட்டமாக 4 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.

Related Stories: