மாநிலங்களுக்கு இழப்பீடாக தராமல் ரூ.47,272 கோடி ஜிஎஸ்டி நிதியை ஸ்வாகா செய்த மத்திய அரசு: வேறு செலவுக்கு பயன்படுத்தியது அம்பலம்; சிஏஜி அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

சென்னை: மாநிலங்களுக்கு இழப்பீடாகத் தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை, சட்ட விதிகளை மீறி, வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு, இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், ஜிஎஸ்டி வசூல் குறைந்ததைக் காரணம் காட்டி, இழப்பீடு தர முடியாது என கைவிரித்து விட்டது. கொரோனா பரவலால் மாநிலங்களுக்கு எல்லா வகையிலும் வசூல் குறைந்ததால், நிதி இல்லாமல் தள்ளாடி வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உதவ முன் வராத மத்திய அரசு, மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. நிதியில்லை என கைவிரித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘வசூல் வந்தால்தானே தர முடியும்?. இழப்பீடு செஸ் போதுமான அளவு வசூல் ஆகாவிட்டால் எப்படி தர முடியும்? என கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரம் அவர் அளித்த விளக்கத்தில், இந்திய தொகுப்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்திருந்தார். ஆனால், சட்ட விதிகளை மீறி, ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை இந்திய தொகுப்பு நிதியத்தில் வைத்து, வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியது, மத்திய கணக்குக் தணிக்கை அலுவலக (சிஏஜி) அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஜிஎஸ்டி செஸ் வசூல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் 8, 9 மற்றும் 13ல் உள்ள விவரங்கள் மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதிக்கு அனுப்பப்பட்ட தொகை விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, கடந்த 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுக்கு இடையே குறுகிய கால கடனாக ரூ.47,272 கோடியை மேற்கண்ட நிதியில் வைத்து, அதை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி  இழப்பீடு செஸ் சட்ட விதிகள் 2017ன் படி, இது சட்ட மீறலாக கருதப்படுகிறது என, சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. மத்திய - மாநில வரிகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டன. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை ஈடு செய்ய, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு சம்மதித்தது. இதற்காகத்தான், ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூல் செய்யப்படுகிறது. எனவே, சட்ட விதிகளின்படி. மேற்கண்ட தொகையை ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சேர்க்க வேண்டும். இந்த நிதியை சம்பந்தப்பட்ட நிதியாண்டில் பயன்படுத்தாவிட்டாலும், இந்த நிதி இருப்பை அடுத்த ஆண்டுக்கான கணக்கில் சேர்த்து இழப்பீடு வழங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், இழப்பீடு நிதிக்கு அனுப்பாமல், மத்திய தொகுப்பு நிதியத்தில் வைத்துப் பயன்படுத்தியது சட்ட மீறல்.

உதாரணமாக, கடந்த 2018-19 நிதியாண்டில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க பட்ஜெட்டில் ரூ.90,000 கோடியும், மாநிலங்களுக்கு இழப்பீடு அனுப்ப இதே அளவு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் ரூ.95,081 கோடி வசூல் ஆகியுள்ளது. ஆனால், இதில் ரூ.54,275 கோடியை மட்டுமே இழப்பீடு நிதிக்கு வருவாய்த்துறை அனுப்பியுள்ளது. இதன்படி, இழப்பீட்டு நிதியில் இருந்து, முந்தைய ஆண்டு இருப்பு ரூ.15,000 கோடியையும் சேர்த்து ரூ.69,275 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதன்மூலம், நிதி குறைவாக அனுப்பியதால் ரூ.35,275 கோடியும், மாநிலங்களுக்கு இழப்பீடு நிதி வகையில் ரூ.20,275 கோடியும் மத்திய அரசுக்கு மிச்சமாகியுள்ளது என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கணக்கீட்டு தவறுகளை நிதியமைச்சகம் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மாநிலங்களுக்கு இழப்பீடு தர நிதியில்லை என கைவிரித்த மத்திய அரசு, அதற்கான நிதியை பிற செலவுகளுக்கு பயன்படுத்தியது அம்பலம் ஆகியுள்ளது.

* நிதியுதவி அல்ல… மாநிலங்களின் உரிமை

பொதுக் கணக்கிற்கு இந்த நிதியை மாற்றியதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு வைப்பு முறையிலும் தவறு நேர்ந்துள்ளது. அதாவது, ‘இதர நிதிச்சேவைகள்’ என்ற பெயரில் நிதியை மாற்றுவதற்கு பதிலாக, ‘மாநிலங்களுக்கான நிதியுதவி’ என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடாகத்தான் இந்த நிதி வழங்கப்படுகிறது. இது நிதியுதவி அல்ல. மாநிலங்களுக்கான உரிமை எனவும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

* அனைத்து நிதியிலும் கைவைத்த அவலம்

ஜிஎஸ்டி இழப்பீடு வரியில் மட்டுமல்ல, பிற வரி வசூல்களிலும் கூட சம்பந்தப்பட்ட நிதி இருப்புக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்ததும் சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி, கச்சா எண்ணெய் வரி, பொது சேவை வரி மற்றும் தேசிய கனிம அறக்கட்டளை வரி என பிற வகையிலும் மத்திய அரசுக்கு செஸ் வரி வசூல் ஆகிறது. இவ்வாறு 35 செஸ் வரிகள் மற்றும் இதர வரி வருவாய்கள், கட்டணங்கள் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2,74,592 கோடி வசூலானது. இதில் ரூ.1,64,322 கோடியை மட்டுமே மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிதி இருப்பு மற்றும் வாரியங்களுக்கு அனுப்பியுள்ளது. எஞ்சிய ரூ.1,10,270 கோடியை மத்திய தொகுப்பு நிதியத்தில் வைத்து பயன்படுத்தியுள்ளது எனவும் சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

Related Stories: