கொரோனா பரவலால் 5 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று முதல் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

சென்னை: கொரோனா நோய் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்கப்படுவதையொட்டி, உயரதிகாரிகள் பலர் நேரில் ஆய்வு செய்தனர். சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவியது. இதனையடுத்து, அங்கு இயங்கிவந்த பழம் மற்றும் மலர் அங்காடிகள் ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறி மார்க்கெட் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து காய்கறி அங்காடி திருமழிசைக்கும், பழ மார்க்கெட் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கும் மாற்றப்பட்டன. பூ மார்க்கெட் வானகரம் பகுதியில் உள்ள கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாபாரிகள் கடந்த ஜூலை 14-ம் தேதி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், ஆகஸ்டு 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓபிஎஸ் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நேரில் ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்டார். மேலும், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் காய்கறி மொத்த விற்பனை அங்காடியை இன்றும், பழம் மற்றும் பூ மார்க்கெட்டை அடுத்த கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்கவுள்ள நிலையில், நேற்று இரவு கோயம்பேடு வணிக வளாகத்தில், குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் உட்பட அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என, இணை கமிஷனர் மகேஷ்வரி, அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் மற்றும் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உட்பட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: