குடியாத்தம் அருகே அதிகாலையில் குட்டியுடன் ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானைகள்: பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

வேலூர்: குடியாத்தம் அருகே குட்டியுடன் ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதி தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்த யானைகள் மோர்தானா அணை பகுதியில் அடிக்கடி சுற்றித்திரிகிறது. தற்போது, அணை நிரம்பியுள்ளதால் யானைகள் அணைப்பகுதிக்கு செல்ல முடியாமல் குடியாத்தம் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் நுழைய முயல்கிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தில் நுழைய முயன்றது. இதனை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை குட்டி உட்பட 4 யானைகள் அங்குள்ள கிராமத்திற்குள் நுழைய முயன்றது. தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். அதிகாலை நேரத்தில் கிராமத்திற்குள் யானைகள் நுழைய முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, மலை கிராமங்கள் அருகில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் சுற்றித்திரிய வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: