சென்னை ஐசிஎப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐசிஎப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று ஐசிஎப்-ல்ஏற்பட்ட தீ விபத்தின் போது இவர் பணியில் இருந்திருக்கிறார். அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, நியூ ஆவடி சாலை அருகே அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் எலக்ட்ரிக் குடோன் உள்ளது. இங்கு ரயில் பெட்டிக்கு தேவையான பொருட்கள், வயர், காப்பர், மின் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வில்லிவாக்கம், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர், செம்பியம், எழும்பூர், அம்பத்தூர், திருவல்லிகேணி, வியாசர்பாடி, கோயம்பேடு, அசோக் நகர், மாதவரம் உள்பட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அங்கிருந்த எலக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தொடர்ந்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே நேரத்தில் ரயில்வே நிர்வாகம் தொடர்பாகவும் விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது தான் அந்த தீ விபத்து நடந்து கொண்டிருக்கும் போது அப்போது பணியில் இருந்த காஜா முகைதீன்(55) என்பவர் இவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் இசிஎப் வளாகத்துக்கு அருகில் உள்ள தன் சட்டையாலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக காஜா முகைதீன் என்பவர் அந்த பகுதியில் மரத்தின் கீழே சட்டையாலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் தூக்கிட்ட விதம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்து விட்டு யாரேனும் அவரை இவ்வாறு தொங்க விட்டிருக்கிறார்களா? போன்ற பலவேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: